இளையராஜா வெறுப்பாளர்களின் கருத்துக்கள் ..

Must read

நெட்டிசன்:

தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீ்ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையாராஜவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது நாகராஜன் கே.எஸ். (Nagarajan KS) அவர்களின் முகநூல் பதிவு:

சரியாக இரண்டு வருடங்கள் முன்பே (மார்ச் 2015) அகி ம்யூசிக் சம்பந்த நீதிமன்ற வழக்கு முடிவில், இளையராஜாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த தருணத்தில் ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தன்னுடைய பாடல்களின் உரிமையை மதிக்குமாறும், தன்னுடைய பாடல்களை மேடையில் Perform செய்யும் எந்த orchestraவும் இனி தனது உழைப்பை/உரிமையை மதிக்கும் வண்ணம் தனது அனுமதியைப் பெற்று குறைந்த பட்ச ராயல்டியையாவது வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இது எல்லாருக்கும் தெரியும். அப்போதே பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.பி.பி’க்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. “இனி நான் உன் பாட்டை பாடக்கூடாதாடா?” என்று அவரே ஒருமுறை கேட்டதாக சொல்வார்கள். இவ்வளவும் தெரிந்தும், தெரியாதது போல் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பியது யார் குற்றம்? டிக்கெட்டெல்லாம் போட்டு வித்துவிட்டு, நோட்டீஸ் வந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் Ignorance மற்றும் Victim card play செய்வது யார் குற்றம்? ரசிகர்களுக்கு டிக்கெட் போட்டு ஏமாற்றியாகிவிட்டது. இப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும். ராஜாவை திட்ட பொதுவெளியிலும், மீடியாவிலும் ஆட்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே “அறிவிருக்கா”ன்னு வேற கேட்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் எது தார்மீகம், எது சரியென்று ஆராயாமலே தன் பக்கம் நிற்பார்கள் என்று எஸ்.பி.பி நினைத்திருக்கலாம்.

இதில் பெரிய காமெடி என்னவென்றால் இது ஏதோ தனக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக எஸ்.பி.பி காட்டிக்கொள்வது. இருவருக்கும் terms சரியாக இருக்கும்பொழுது இப்படி ஒரு நோட்டீஸ் வந்திருந்தால் அதை அதிர்ச்சி எனலாம். ஆனால், இந்த முன் அனுமதி/ராயல்டி விவகாரத்தால் எஸ்.பி.பி’க்கு ராஜா மேல் மனஸ்தாபம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு படவிழாவில் ராஜாவின் பேரைக் குறிப்பிடாமல் “தூக்கு மாட்டிக்கொள்ளலாம்” எனும் அளவுக்கு வெறுப்பைக் கக்கிவிட்டு, இந்த surprise முகத்தைக் காட்டுவது கடைந்தெடுத்த சூது.

மேடையில் பாடுவதற்கு தான் ரஹ்மானுக்கு ராயல்டி கொடுப்பதில்லை என்று எஸ்.பி.பி அறுதியிட்டு சொல்ல முடியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் தனது உரிமைகளை நிலைநாட்டும் விஷயத்தில் shrewd. அதுதான் சரியும் கூட. இதனால் அவருக்கும் ஷாருக் கானுக்கும் 2006ல் பிரச்சனை வந்ததை நினைவூட்டிக்கொள்ளுங்கள். அமீர் கானுடனும் இதே பிரச்சனை தான். ரஹ்மான் இதை கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுத்துகிறார். ஆனால், ராஜா மட்டும் தர்மப்பிரபுவாக இருக்க வேண்டுமா?

வழக்கம் போல ராஜா வெறுப்பு கிளுகிளுப்பு கோஷ்டி இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டது. தனது ஒரு ட்வீட்டையோ, ஃபேஸ்புக் போஸ்டையோ வேறு எவனாவது காப்பி செய்து தனது பதிவாக போட்டால் மூக்கால் அழுபவர்கள் இளையராஜா மட்டும் தனது உரிமையைக் கோரக்கூடாது என்று கோஷம் போடுகிறார்கள். இவர்களுக்கு பிரச்சனை உரிமையில் இல்லை. இவர்களின் வெறுப்பு இளையராஜா என்ற தனி மனிதனின் மீது. அதற்கு இளையராஜாவின் இந்துமத தீவிர நம்பிக்கையில் இருந்து, தேவர் மகனுக்கு இசையமைத்தது, அவரின் பூர்வீகம் வரை பல்வேறு காரணங்கள் உண்டு.

நேற்று எஸ்.பி.பி எழுதிய பதிவில் எல்லாம் தெரிந்தும் தான் தவறிழைத்துவிட்டதாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதுதான் நேர்மை. ஆனால், அவர் அதை செய்யவில்லை.

எஸ்.பி.பி’யின் குரலைக் கேட்டு வளர்ந்த எனக்கு இதுதான் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

 

More articles

Latest article