சென்னை:
இளையராஜா-75 நிகழ்ச்சியில் பேசிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், நான் ஆஸ்கர் பெற்றபோது, இளையராஜா சார் என்னை பாராட்டினார்… அது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது…. ஏனென்றால் மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால்தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 2 நாட்கள் நடத்தப்பட்ட இளைய ராஜா-75 நிகழ்ச்சி வெகு விமரிசையுடன் நடைபெற்று முடிந்தது.
நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அவருக்கு புகழ்மாலை சூட்டி கவுரவித்தனர்.
பிப்ரவரி 2ந்தேதி அன்று இளையராஜா-75 நிகழ்ச்சியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
விழாவின் துவக்கத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பேசும்போது, “எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரேயொரு ராஜாதான். அது நமது ‘இசைஞானி’ இளையராஜாதான் என்று பேசியிருந்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
பத்மவிபூஷன் இளையராஜாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கவுரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்…” என்றார்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்துதான் இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரேயொரு கெட்ட பழக்கம் இசைதான். நான் ஆஸ்கர் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டுதான் மகிழ்ச்சியளித்தது.
ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால்தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி..” என்றார்.
ரஹ்மான் தனது செல்போனில் இருக்கும் கீ போர்டு மூலமாக ‘புன்னகை மன்னன்’ படத்தில் இடம் பெற்ற தீம் மியூஸிக்கை இசைத்துக் காட்டினார். இதைக் கேட்டு இம்ப்ரஸ் ஆன இளையராஜா தனக்காக மீண்டும் ஒரு முறை இதை இசைக்கும்படி கேட்டுக் கொண்டார். ரஹ்மானும் இரண்டாவது முறையாக இசைத்துக் காண்பித்தார்.
மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்த கீ போர்டில் இசைக்க இளையராஜா அதை மேடையில் பாடினார். இதேபோல் ‘தென்றல் வந்து தீண்டு்ம்போது’ பாடலையும் இசைத்துக் காட்டினார் ரஹ்மான்.
இளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததைவிட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் அவர் பணியாற்றியிருக்கிறார்…” என்றார். “இதை நீதானே சொல்லியிருக்கணும்” என்று ரஹ்மானிடம் கேட்டு அவரைக் கிண்டலடித்தார் இளையராஜா.
நடிகர் சங்கத்தின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு மேடையில் தங்கத்தாலான வயலின் கருவியைப் பரிசாக அளித்தார்கள். இந்த பரிசை அந்தக் கால ராஜாக்களின் பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தது அழகாக இருந்தது.
நடிகைகள் பூர்ணா, இனியா, ரூபிணி, நதியா போன்றோர் இசைஞானி இளைய ராஜா இசையமைத்த பாடல்களுக்கு நடனமாடினார்கள்.
நடிகர் கார்த்திக்கும், நடிகை ராதாவும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின்போது நடந்த விஷயங்களை மேடையில் பகிர்ந்து கொண்டார்கள்.
மொத்த நிகழ்ச்சியையும் நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, அனுஹாசன், லட்சுமி பிரியா நால்வரும் இணைந்து தொகுத்தளித்தனர்.
நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகை ஆண்ட்ரியா மேடையில் பாடிய நிகழ்வுதான். “கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” பாடலையும், “நேற்று இந்த நேரம்” பாடலையும் பாடி அசத்தினர்.
இளையராஜாவின் 2 நாள் நிகழ்வுகளும் செவிக்கு மட்டுமல்லாது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் வியப்பேதுமில்லை.