சென்னை:
முதன்முதலில் தனக்கு ‘இளந்தென்றல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் டி.ஆர்.பாலுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய “பாதை மாறா பயணம்” நூல் வெளியிட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக முன்னோடிகள் உங்களுடைய போராட்டங்களை, நீங்கள் கண்ட களங்களை, நீங்கள் செய்திருக்கக்கூடிய தியாகங்களை, கட்சி பணியாற்றிய நேரத்தில் உங்களோடு பயணித்த தோழர்களுடைய பங்களிப்பைத் தொகுத்து நூலாக பதிவு செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “டி.ஆர்.பாலு இன்றைக்கு திமுக பொருளாளராக இருக்கிறார் என்றால், கருணாநிதி, க.அன்பழகன், எம்.ஜி.ஆர் இருந்த பொறுப்பு அது. நானும் அந்தப் பொறுப்பிலே இருந்திருக்கிறேன். இத்தகைய பொறுப்பை பாலு அவர்கள் பெற்றிருக்கிறார் என்று சொன்னால், அவர் உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பிற்கு கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் அது. 17 வயதில் மிகத் தீவிரமான அரசியலுக்குள் நுழைந்த டி.ஆர்.பாலு அவர்கள் இன்றைக்கு, 80 வயது கடந்த நிலையிலும் ஒரே கொடி – ஒரே இயக்கம் – ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
டி.ஆர்.பாலுவை நான் 1970-லிருந்து அறிவேன். இப்போது வாங்க, போங்க என்று பேசுகிறேன். அவர் பொறுப்புக்கு தகுந்த மரியாதை கொடுக்கிறார். நீ, வா, என்றுதான் பேசுவோம். இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், வாயா, போயா என்று தான் பேசுவோம். இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், வாடா, போடா என்று பேசிய காலம் உண்டு. அப்படியெல்லாம், பழகி இருக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், முதன்முதலில் எனக்கு ‘இளந்தென்றல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் டி.ஆர்.பாலுதான் எனவும் நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.
தொடர்ந்து, சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க. தான் தடுத்தது. இன்று, ”ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது” யார் சொல்கிறார், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜிதேந்திரசிங் அவர்கள் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.
இவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இந்த பதினெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ பயன்களை இந்த தமிழ்நாடு அடைந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இந்த பெருமை வந்து சேர்ந்திருக்கும். இத்தனை வளர்ச்சியையும் பாஜகவும் – அதிமுகவும் தடுத்துவிட்டது. இதனை மீண்டும் டி.ஆர்.பாலு அவர்கள் கையில் எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடவேண்டும். இது அண்ணா, கருணாநிதியின் கனவுத் திட்டம். கனவுத் திட்டம் என்றும் வலியுறுத்தினார்.