திருவண்ணாமலை
மறைந்த மனோஜ் பாரத்திராஜா ஆன்மா சாந்தியடைய இளையராஜ மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) கடந்த 25ம் தேதி மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து “வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இவர் ஷங்கரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
2023ம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்த சூழலில் அவர் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் என்று ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என வழிபாடு செய்துள்ளார் இளையராஜா. இதற்கு முன்னதாக நடிகர் புனித் ராஜ்குமார், பி.எஸ்.பி பாலசுப்பிரமணியன் உள்பட பலருக்கும் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.