சென்னை
கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கைப்பட்டை (wrist band) ஒன்றை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஜுரம், சளி, இருமல் போன்றவை வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகள் ஆகும். ஆனால் சிலருக்கு இத்தகைய அறிகுறிகள் இல்லாமலே பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கணிசமாகக் குறையும் போது கடும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பு நேரிடுகிறது.
இதைத் தவிர்க்க கொரோனா குறித்த வெளிப்படையா அறிகுறிகள் மட்டுமின்றி மறைமுக அறிகுறிகளையும் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதற்காக சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் குழு ஒன்று வாரங்கல் என் ஐ டி முன்னாள் மாணவர் குழுவுடன் இணைந்து ஒரு கைப்பட்டையை கண்டுபிடித்துள்ளது.
கைக்கடியார வடிவில் உள்ள இந்த பட்டை மூலம் உடல் வெப்பம், இதயத் துடிப்பு எண்ணிக்கை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும் இதை ம்யூஸ் ஹெல்த் ஆப் என்னும் செயலி மூலம் மொபைல் உடன் இணைக்கலாம். இந்த செயலி ஆரோக்ய சேது செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் கொரோனா அதிகம் உள்ள மண்டலத்துக்குள் சென்றால் எச்சரிக்கை கிடைக்கும்.
அது மட்டுமின்றி உடல் வெப்பம் அதிகரிப்பு, இதயத் துடிப்பில் மாறுதல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு ஆகியவை குறித்தும் உடனுக்குடன் எச்சரிக்கை கிடைக்கும். இந்த பட்டையின் விலை ரூ. 3500 இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்துக்குள் சுமார் 2 லட்சம் பட்டைகள் விற்கப்படும் எனவும் 2022 ஆம் வருடம் 10 லட்சம் பட்டைகள் விற்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
[youtube-feed feed=1]