சென்னை: ஐஐடி சென்னையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மொத்த பாதிப்பு 195 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்தியஅரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வந்ததும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பி மணியன் கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் படிக்கும் வடமாநில மாணவிகள் சில பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்குள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 7490 பேரில் 7300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மடுவங்கரை உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் டெமனாஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை 2.O திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், 6-12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. அது வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் .இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பணம் வசூலிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்க அனுமதி கிடைத்தவுடன் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.