வெற்றியின் அளவுகோல் வருமான வரி! 

3. எவ்வளவு வருமானத்துக்கு எவ்வளவு வரி….?

‘எனக்கு மாசம் இவ்வளவு வருமானம் வருது. இதுக்கு நான் எவ்வளவு வரி கட்டணும்…? முதல்ல இதை சொல்லுங்க. மீதி எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்…’

சரி. அப்படியே செஞ்சுடலாம்.

வருமான வரியைப் பொறுத்த மட்டும், எல்லாருக்கும் எப்போதும் ஒரே மாதிரியான வரி விகிதம் இல்லை.

‘அது எப்படி…? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வரி விகிதம்…

ஒருத்தருக்கு அதிகமா இன்னொருத்தருக்கு குறைவா…. அது எப்படி நியாயம்…?’

கேள்வி நியாயந்தான். ஆனா… வரி விகிதம், ஆளுங்களை வச்சி மார்றது இல்லை….’

‘பின்னே எப்படி..?’

வருமானத்தை வச்சி வரி விகிதம் மாறும். ஒருத்தருக்கு, போன வருஷம் 40 லட்சம் வருமானம் வந்துச்சி….

இந்த வருஷம் வெறுமனே நாலு லட்சம்தான் வருமானம்… அப்போ…? அது அதுக்குத் தனியே வருமானத்துக்கு ஏத்த மாதிரி வரி விகிதமும் இருக்கும்.

பொதுவா உலகத்துல எல்லா நாடுகள்லேயுமே ‘மேலேறிச் செல்லும் வரி விதிப்பு’ அதாவது ‘Progressive Taxation’ ங்கற கோட்பாடுதான், வருமான வரி விதிப்புல நடைமுறையில இருக்கு.

இது என்ன முறை…?

குறைவா வருமானம் இருக்கறவங்களுக்கு குறைந்த வரி விகிதம்.

கூடுதலா சம்பாதிக்கிறவங்களுக்கு அதுக்கு ஏத்த மாதிரி கூடுதல் வரி விகிதம்.

சுருக்கமா சொல்லணும்னா வருமானம் அதிகம்னா வரியும் அதிகமா இருக்கும்.

விற்பனை வரி எடுத்துக்குவோம்.

எவ்வளவுக்கு வித்தாலும் 4%… 8% ன்னு ஒரே விகிதம்தான்.

5000க்கு வித்தாலும் அதுதான்; 5 கோடிக்கு வித்தாலும் அதே %தான்.

இது, நிலையான வரி விகிதம் (standard rate of taxation)

இந்த முறையை வருமான வரியில கொண்டு வர முடியாது; கூடாது.

மிகப் பெரிய செல்வந்தரையும் மாசம் 50000 சம்பளம் வாங்குறவரையும் ஒரே தட்டுல வச்சிப் பார்க்க முடியுமா…? ஒரே மாதிரி வரி குடுக்கச் சொல்லலாமா…?

தவறுதானே…? அதனாலதான் ‘progressive taxation’ வச்சிருக்கோம்.

இந்தியாவுல இப்போ உள்ள சட்டப்படி 2,50,000 ரூபாய் வரைக்கும் வருமான வரி இல்லை.

ரெண்டு லட்சத்து அம்பாதியிரம் வரைக்குமான்னு மலைச்சுப் போக வேணாம்.

இது மாச வருமானம் இல்ல. ஆண்டு வருமானம். அதாவது 12 மாச வருமானம். .

அப்படின்னா, மாச சம்பளம் சுமார் 21,000 ரூபாய் வந்தாலே வருமான வரி கட்ட வேண்டி வந்துடும்.

வருமானம், 2,50,000க்கு மேல 5 லட்சம் வரைக்கும் – இரண்டு விகிதங்கள் இருக்கு.  5% மற்றும் 10%

சற்றே குழப்பம் தரக் கூடியது இது. தெளிவாப் பார்த்துடுவோம்.

2,50,000 – 5 லட்சம் என்பது ஒரு தளம் அல்லது நிலை. ஆங்கிலத்துல ‘ஸ்லாப்’ (slab)

இந்த நிலையைத் தாண்டிப் போகாம அதுக்குள்ளயே இருந்துட்டா, அதாவது வருமானம் 5 லட்சத்துக்கு உள்ள இருந்தா, 5%தான் வரி.

இதுவே அவருடைய வருமானம், 5 லட்சத்துக்கு மேல போனா, இந்த தளம் அல்லது நிலை (slab)க்கு 10% வரி கட்டணும்.

ஒருத்தருக்கு வருமானம் – 4 லட்சம் ரூபாய். ரெண்டரை லட்சம் ரூபாய் வரைக்கும் வரி இல்லைதானே…?

அதைக் கழிச்சுட்டு மீதம் இருக்குற ஒன்றரை லட்சத்துக்கு 5% அதாவது ரூ 7500 வரி கட்டணும்.

இதுவே அவருக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம்னு வச்சிக்குவோம்.

அப்போ, இதே 2,50,000 இருந்து அஞ்சு லட்ச ரூபாய் வரைக்கும் – 10% வரி.

இதேபோல 5 லட்சத்துல இருந்து 10 லட்சம் வரைக்கும் – 20%

10 லட்சத்துக்கு மேல போனா 30%.

அவ்வளவுதான். ஆக 5%, 10%; 20%; 30%னு நான்கு விகிதங்கள் (rates) இருக்கு.

இதை வச்சி ஒருத்தருக்கு எவ்வளவு வரி வரும்ணு கண்டுபிடிச்சுடலாம்.

உதாரணமா ஒருத்தருக்கு 12 லட்ச ரூபாய் வருமானம்.

எவ்வளவு வரி கட்டணும்…?

ரூ. 2,50,000 வரைக்கும்     –   வரி இல்லை.

2,50,000 – 5 லட்சம் வரை  (10%)    –    25000

5 லட்சம் – 10 லட்சம் (20%)       –   100000

10 லட்சம் – 12 லட்சம் (30%)      –    60000.

மொத்தம் எவ்வளவு வருது…?  1,85,000ஆ…?  அதுதான்,

12 லட்சம் வருமானம் வர்ற ஒருத்தரு கட்ட வேண்டிய வருமான வரி.

இது அதிகமா..? குறைவா…? பார்த்துடுவோம்.

12 லட்சம் வருமானம்னா மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாயா…?

இதுல ஒரு வருஷத்துக்கு வருமான வரி, 1,85,000 ரூபாய்.

ஏறத்தாழ ரெண்டு மாச சம்பளம். அல்லது மாசத்துக்கு 15,000 ரூபாய்க்கு மேல.

இது அதிகமா குறைவா..? வரி கட்டறவங்களே முடிவு கட்டிக்குங்க.

எவ்வளவு வருமானம் இருந்தா எவ்வளவு வரி கட்டணும்ணு தெரிஞ்சு போச்சா…?

எளிமையாதானே இருக்கு..? இவ்வளவுதான் வருமான வரிப் பாடமே..

‘என்னது…? இவ்வளவுதானா…? அப்படின்னா.. வருமான வரிச் சட்டம்னு அம்மாம் பெரிய புத்தகம் எதுக்கு….?’

அதாவது, இவ்வளவுதான்னு சொன்னா அவ்வளவுதான்னு அர்த்தம் இல்லை.

‘இவ்வளவு வரி கட்டணுமா..? கொஞ்சம் குறைச்சிக்கக் கூடாதான்னு கேட்கலாம் இல்லை…?

வருமானத்தை எப்படி கணக்கு செய்யறது…? எதையெல்லாம் வருமானத்துல இருந்து கழிச்சுக்கலாம்..?

‘நீங்க சொல்ற அளவுக்கு எனக்கு வருமானம் இல்லைன்னு கூட சொல்லலாம்தானே..?’

என்னல்லாம் செஞ்சா, வருமான வரி தொகையில இருந்து கழிவு அல்லது நிவாரணம் கிடைக்கும்…?

இதெல்லாம்தான் இனிமே பார்க்கப் போறோம். சரியா…?

‘சரி. பார்த்துடுவோம்’.

(தொடரும்)