சென்னை:  சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பேருந்து நிறுத்தங்களில் சேர் ஆட்டோக்காரர்கள் நின்றுகொண்டு, பேருந்துகளில் பயணிகள் ஏறுவதை தடுக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதையடுத்து,  பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில்  பொதுமக்கள் பேருந்துகளுக்கு பதிலாக சேர் ஆட்டோவையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இலவச பேருந்து இயக்கப்பட்டது முதல் பெண்கள் பேருந்துகளையே நாடி வருகின்றனர். இதனால் ஷேர் ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான சேர் ஆட்டோக்கள்,   பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், பேருந்துகள், பேருந்து நிலையத்தில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது. இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பயணிகள் மற்றும் ஆட்டோக்காரர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுதொர்பாக காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் அதிகரித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள காவல்துறையினர் அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக  பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வரும்,   110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து, அங்கு நிறுத்தப்பட்டு வரும், ஷேர்  ஆட்டோக்களை அகற்றினர். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் செல்பட்ட சேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர்,  சேர் ஆட்டோக்கள்  பிரச்சினைக்குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.