சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை”   என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்து உள்ளார்.

தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் ஆகும். தீய நோக்கம் கொண்டவர்கள், குறுகிய காலத்திலேயே அதிகம் இலாபம் பார்க்க நினைப்பவர்கள், உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்வது மன்னிக்க முடியாதது என்றும் சாடியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில்,  கோடைக்கால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்-

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   ஒவ்வொரு கோடைக்காலத்திலும் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாகவும், வெப்ப வாதம் பாதிப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலும், ஊராட்சி அளவிலும் கூட விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்றிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கோடைக்காலம் தொடங்கியிருப்பதால் வெப்ப பாதிப்பு அதிகரிக்கும் என்கின்ற வகையில் தமிழ்நாட்டில் பெரும்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சநிலை இருக்கின்றது. எனவே பொதுமக்கள் உயர்வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 03 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக குழந்தைகள், வயதில் மூத்தவர்கள் அவசியம் இல்லாமல் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க போதுமான குடிநீரை பருகிட வேண்டும். ORS கரைசல் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவிற்கு இந்த கரைசல் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேரமும் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல் எலுமிச்சை சாறு, பழச்சாறுகள், தர்பூசணி, முலாம்பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பானங்களை பருகலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திராட்சை, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. செயற்கை குளிர்பானங்களான காபி, டீ, மது போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் ஆன வெளிர்நிறம் கொண்ட தளர்வான உடைகளை அணிவது சரியாக இருக்கும்.

அதேபோல் வெளியில் செல்கின்றபோது தேவையான குடிநீர், தொப்பி, குடை போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம். வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்வது மிக அவசியம். நான்கு சக்கர வாகனங்களில் அமர்ந்தவுடன் உடனடியாக ஏசி பயன்படுத்தாமல் சிறிது நேரம் கண்ணாடி கதவுகளை இறக்கி வைத்துவிட்டு  இயற்கை காற்றோட்டத்திற்கு பிறகு குளிர்சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதய நோயாளிகள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடும். அவர்களை கூடுதல் கவனத்துடன் நல்லது. ஆகையால் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று சென்னை மாநகராட்சியில் தொடங்கி வைத்திருக்கிறோம் என்றார்.

மேலும் செய்தியாளர்கள்,   தர்ப்பூசணி பழத்தில் ஊசி மூலம் கலப்படம் செய்வது தொடர்பான கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமைச்சர்,   தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் ஆகும்.

இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், குறுகிய காலத்திலேயே அதிகம் லாபம் பார்க்க நினைப்பவர்கள், உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்வது மன்னிக்க முடியாதது. இவர்கள் இந்த பழத்தில் ஊசியின் வாயிலாக நிறத்தினை மாற்றுவது, இனிப்புச் சுவையை அதிகம் கூட்டுவது என்கின்ற வகையில் ஊசி மூலம் செலுத்துவது என்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அண்மையில் கிருஷ்ணகிரியில் கூட ஒரு கடையில் தர்பூசணி பழம் தொடர்ந்து இனிப்பாக இருக்கிறது என்று சந்தேகம் அடைந்து உணவுப் பாதுகாப்பு துறையினர் சென்று ஆய்வு செய்ததில் அந்த பழங்களில் ஊசியின் மூலம் இராசயானம் கலந்திருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கூட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.