“நிதிமன்றத்துக்கு சென்றால் வருத்தபட வேண்டியது வரும்” நீதிமன்றத்தை தான் நாடப் போவதில்லை என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ரஞ்சன் கோகோய் தன் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்தது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா விமர்சனம் செய்திருந்தார்.
“இது தொடர்பாக நீங்கள் நீதிமன்றத்தை நாடுவீர்களா ?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு.
“நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றம் சென்று, நமது கரையை போக்கிகொள்ள நினைப்பது, வருத்தத்தில் தான் முடியும்” என்று கூறினார்
“இந்த வழக்கு குறித்து தகவல்கள் அந்த பெண்மணிக்கு தெரியவில்லை” என்று மஹீவா மொய்த்ரா பெயரை குறிப்பிடாமல் கூறிய கோகோய், “இந்த வழக்கு குறித்த ஆவணங்களை நான் எனக்கு அடுத்த நிலையில் இருந்த நீதிபதி போப்டேவிடம் ஒப்படைத்து விட்டேன், அவர் தான் விசாரணை நீதிபதிகளை நியமித்தார்” என்று கூறினார்.
இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த கோகோய் மேலும் கூறியதாவது :
“நீதித்துறையை சீரமைக்க தேவையான, முறையான வழிகாட்டுதல்கள் உடனடியாக தேவை” என்று தெரிவித்தார்
“மோசமான நீதித்துறையை வைத்துக்கொண்டு 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் எப்படி எட்ட முடியும் ?” என்று கேள்வியெழுப்பினார்.
“2020ம் ஆண்டு உற்பத்திதுறை அனைத்தும் சரிவை சந்தித்தபோது, நீதத்துறை மட்டுமே நிலுவை வழக்குகள் எண்ணிக்கையில் அபரிமிதமான வளர்ச்சியடைந்தது” என்று கிண்டலடித்தார்.
கொரோனா காலகட்டத்தில் மட்டும், கீழமை நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 3 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் ஏழாயிரம் வழக்குகளும் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீதித்துறை எப்படி செயல்பட வேண்டும் என்று தெரிவித்த கோகோய், “அரசு அலுவலர்களை நியமிப்பது போல் நீதிபதிகளை நியமிக்காதீர்கள், அந்த வேலைக்கு தகுதியானவர்களை நியமியுங்கள்.
வழக்கை தீர்மானிக்க முழு நேர அர்பணிப்பும், வேட்கையும் வேண்டும். கால நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது.
24 மணி நேரமும் இதை பற்றிய சிந்தனை இருக்கவேண்டும். அதிகாலை 2 மணிக்கு உங்கள் மனதில் ஏதாவது முக்கிய தகவல் தோன்றினாலும் அதை உடனடியாக எழுந்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நீதிபதி என்பவர் இப்படிதான் இருக்கவேண்டும், எத்தனை பேருக்கு இது புரிந்திருக்கிறது ?” என்றார்.
சட்டக் கல்வியில் பயிற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியபோது :
“போபாலில் உள்ள தேசிய நீதித்துறை பயிற்சி மையத்தில் என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது ?
கடல் பற்றிய சட்டங்களும், சமுத்திரம் பற்றிய சட்டங்களும் தான், நீதி நெறிமுறைகள் பற்றி எதுவும்சொல்லித் தரப்படுவதில்லை.
தீர்ப்பு எப்படி எழுத வேண்டும் என்றோ, நீதிமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது என்றோ சொல்லித்தரப்படுவது இல்லை” என்று கூறினார்
வணிக நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் குறித்து பேசிய அவர்,
“பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் வணிக சச்சரவுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
வலுவான சட்ட அமைப்பு இல்லாத போது யாரும் முதலீடு செய்யமாட்டார்கள்.
ஒரே நீதிபதி எல்லாவிதமான வழக்குகளையும் விசாரிப்பது முறையல்ல.”
“அதுபோல் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தீர்பாயங்களில் மாவட்ட நீதிபதிகளிடம் தீர்வுபெற முயற்சிக்கின்றனர்.
அவர்களால் ஏதும் செய்யமுடியாது என்பதால் அது உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என்று மேல்முறையீட்டுக்கு செல்கிறது.
மொத்தத்தில் தீர்பாயங்கள் செயல்படுவதே இல்லை” என்று பொரிந்து தள்ளினார்.
“ரபேல் மற்றும் அயோத்தி தீர்ப்புக்காக உங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டதா ?” என்ற கேள்விக்கு
“ஆக்கப்பூர்வமான வேலை செய்வதற்கே ராஜ்ய சபா உறுப்பினரானேன்.
எனக்கு ஆதாயம் பெற வேண்டியிருந்தால் நான் இதை தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்.
இதைவிட மிகப்பெரிய ஏதாவது ஒன்றை தான் கேட்டிருப்பேன்.
யார் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையில்லை நான் என் மனசாட்சிப்படி நடக்கிறேன்.”
ராஜ்ய சபா உறுப்பினராக தான் ஒரு ரூபாய் கூட வருமானம் பெறவில்லை என்றும் அதனை தாம் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டதாகவும் கோகோய் தெரிவித்தார்.
“நீதிபதிகள் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்க கூடாது” என்று கூறிய அவர்.
உச்ச நீதி மன்ற நீதிபதி எம்.ஆர். ஷா பிரதமர் மோடியை பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாக புகழ்ந்து பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.