டில்லி

டில்லியில் தாங்கள் வாக்களித்தபடி சாலைகள் அமைக்கவில்லை எனில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என டில்லி வாழ் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி நகரில் பல இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல குடியிருப்புக்கள் உள்ளன. இவை சரியான அனுமதி இன்றி அமைக்கப்பட்ட குடியிருப்புக்கள் என்பதால் இந்த பகுதிகளில் சாலை வசதிகள் சரிவர இல்லாமல் உள்ளது. அதனால் டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு டில்லி முழுவதும் விரைவில் சாலைகள் அமைத்து தரப்படும் என தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகிறது.

இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 38 குடியிருப்புகளை மேம்படுத்தும் பணி நேற்று டில்லியில் நடந்தது. இந்த பணிகளை துவக்கி வைத்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

இந்த விழாவில் பல பாஜக தொண்டர்கள் கலந்துக் கொண்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து கோஷமிட்டு கலாட்டா செய்தனர். கெஜ்ரிவால் அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எதிர்பு தெரிவித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது உரையில், “டில்லி அரசு தனது வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். நாங்கள் வாக்களித்தபடி சாலைகள் அமைக்கவில்லை எனில் எங்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம். மத்திய மோடி அரசு எங்கள் அரசுக்கு அளித்து வரும் தொல்லைகளையும் மீறி நாங்கள் பல மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

எங்கள் கட்சிக்கு 7 பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ள நிலையில் நாங்கள் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். அதனால் தான் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வரும் 2020 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெல்லும் என தெரிவித்துள்ளனர்.” என கூறினார்.