புதுடெல்லி:

அலோக் வர்மாவின் கருத்தை அறியாமல், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அவரை நீக்கியது, இயற்கை நீதியின் அடிப்படையை மீறிய செயல் என்று ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டிஎஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உயர் மட்டக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியாகி 60 மணி நேரத்துக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடியது.

இந்த குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

பிரதமரும், நீதிபதி சிக்ரியும் வர்மாவை நீக்கும் முடிவை எடுக்க, எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்த்தார். 2:1 என்ற விகித அடிப்படையில் அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

முடிவு எடுக்க 60 மணி நேரம் இருந்தபோதிலும், வர்மாவை அழைத்து அவர் தரப்பு நியாயத்தை உயர்மட்டக்குழு கேட்டிருக்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து, வர்மாவிடம் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் விசாரித்து இருந்தாலும், பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் அவரை அழைத்து கருத்து கேட்டிருக்க வேண்டும்.

நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் மேற்பார்வையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், வர்மாவை நேரில் அழைத்து அவரது நியாயத்தையும் கேட்டிருக்கலாம்.

இவ்வாறு அழைத்துக் கேட்டபின், வர்மாவுக்கு எதிராகத்தான் உயர்மட்டக் குழுவுக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிக்கை கொடுத்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்திடம் அலோக் வர்மா மீதான ஊழல் வழக்கு விசாரணை நிலுவையில்தான் உள்ளது. இப்படியிருக்கும் போது, அலோக் வர்மாவுக்கு எதிரான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் தலைமையியான உயர்மட்டக்குழு, அவரை சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

உயர்மட்டக் குழுவின் நடவடிக்கை இயற்கை நீதியின் அடிப்படை விதிகளுக்கு முரணானது.
இதே விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்தபோது, அது குறித்து கருத்து ஏதும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. அப்படியே பிரதமர் தலைமையிலான விசாரணைக்குழுவுக்குத் தானே உச்சநீதிமன்றம் அனுப்பியது.

அப்படியிருக்கும்போது, அலோக் வர்மாவின் தரப்பு நியாயங்களை கேட்காமல், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மட்டும் உயர்மட்டக்குழு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
விசாரணை அறிக்கையின் படி நீங்கள் நடவடிக்கை எடுத்தால், அது தனிப்பட்ட ஒருவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இதில் முக்கிய அம்சம்.

குற்றச்சாட்டுக்குள்ளான தொழில் அதிபரிடம் வர்மா லஞ்சம் பெற்றதாகத்தான் குற்றச்சாட்டு, இதற்கான நேரடி சாட்சியம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இல்லை. வர்மாவின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருப்பதால், கூடுதல் விசாரணைக்கு சந்தர்ப்ப சாட்சியம் தேவைப்படுகிறது என்றுதான் விசாரணை அறிக்கையின் இறுதியில் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வர்மா மீதான 11 அடிப்படை குற்றச்சாட்டுக்களில் 6 குற்றச்சாட்டுகளில் இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை. ஒன்று தவறுதலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 குற்றச்சாட்டுக்கள் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன.

லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து நீதிபதி பட்நாயக் கூறும்போது, ” வர்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார். இப்படியிருக்கும் போது, பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழு அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுத்தது அதிகப்பட்டியான அவசரத்தையே காட்டுகிறது” என்றார்.

ரபேல் பேர வழக்கை அலோக் வர்மா விசாரிக்க இருந்த நிலையில் , உயர்மட்டக் குழு விசாரணையில் இருந்து பிரதமர் மோடி விலகியிருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த நீதிபதி தாக்கூர், இத்தகைய குற்றச்சாட்டை வர்மா சொல்லாதவரை, உயர்மட்ட குழு விசாரணைக்கு குழுவிலிருந்து பிரதமர் விலகி இருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.