பாட்னா

பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால் மத்திய அரசு அதை நீக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

நாடெங்கும் ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.   இந்நிலையில் உ பி மாநில மாணவர்கள் நாடெங்கும் பல மாநிலங்களில் சிக்கி உள்ளனர்.  அவர்களை தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் 200 சிறப்புப் பேருந்துகளை ஆக்ராவில் இருந்தும் மற்றும் 100 சிறப்பு பேருந்துகளை ஜான்சி நகரில் இருந்தும் அனுப்பினார்.

இதற்கு பீகார் மாநில முதல்வரும் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இத்தகைய நடவடிக்கைகள்  ஊரடங்கின் நோக்கத்தை சிதைத்து விடும் எனவும் இதனால் பீகார் அரசு வெளி மாநிலத்தில் சிக்கி உள்ள தங்கள் மாநில தொழிலாளர்களை அழைத்து வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பீகார் மாநில மூத்த அமைச்சர் அசோக் சவுத்ரி, “உத்திரப் பிரதேச பாஜக அரசு வெளி மாநிலங்களில் சிக்கி உள்ள மாணவர்களை அழைத்து வரச் சிறப்புப் பேருந்துகளை அனுப்புகிறது.  இது ஊரடங்கு விதிகளை மீறியதாகும்.  ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால் அவற்றை முழுமையாக மத்திய அரசு நீக்கி விடலாம்  அதை விடுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு விதியை பின்பற்ற வேண்டாம்.

எங்கள் மாநிலத்தைப் பொறுத்த வரை ஊரடங்கு விதிகளை அனைவருக்கும் சமமாகப் பின்பற்றி வருகிறோம்.    அதை ஒரு மாநிலம் மீறலாம் என நினைக்கும் போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.   நாங்கள் மத்திய அரசுக்கு வில்லன்கள் அல்ல.  ஒரு பொறுப்பான மாநில அரசாக ஊரடங்கு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறோம்.  ஒருவருக்காக விதிகளை வளைக்கக்கூடாது” எனக் கூறி உள்ளார்.