விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு பா.ஜ.க. அரசு செவிசாய்க்காத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் போராடும் விவசாயிகள் மீது ஆளும் பா.ஜ.க. அரசுக்கு உள்ள வன்மத்தை வெளிப்படுத்துவதாகவே உணரப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பா.ஜ.க. வைச் சேர்ந்த மாவட்ட அளவிலான தலைவரோ அல்லது தேசிய அளவிலான தலைவரோ எந்த ஒரு தலைவரும் மீரட், முசாபர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய கிராமத்தில் கூட நுழைய முடியாது.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

மூத்த அரசியல்வாதியான சத்யபால் மாலிக்கின் இந்த பேச்சு பா.ஜ.க. தலைமைக்கு எதிராக மத்தியிலும் மாநிலத்திலும் கட்சியினரிடையே உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.