டெல்லி:
தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுத்தினால் குதிரை பேரம் நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக பணியாற்றிய இவர், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
டெல்லியில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பரத்வாஜ், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ் ஆர் பொம்மை வழக்கின் தீர்ப்புப்படி ஆளும் கட்சி எம் எல் ஏக்கள் முதலமைச்சர் மாற்றப்படுவதாக முடிவு எடுத்து, ஆளுநரிடம் கடிதம் அளித்தாலே போதுமானது என்று கூறினார்.
அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு பதவி ஏற்பை நடத்திவைத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதுதான் சரியான நடைமுறை என்றும் பரத்வாஜ் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை என்றால்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஆளுநர் எடுக்கவேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகித்தான் ஆகவேண்டும் என்றார்.
அதனால் தீர்ப்புவரும் வரை ஆளுநர் காத்திருக்க தேவையில்லை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம் ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்றும் தெரிவித்த அவர், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்றும் அப்படி செய்தால் பட்ஜெட் கூட்ட தொடரில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
தமிழகத்தில் பொறுப்பு ஆளுனராக பரத்வாஜ் பலமுறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.