சீனு ராமசாமிக்கு விருது அளித்தால் விருதுக்குத்தான் பெருமை!: வைகோ கடிதம்

வைகோ

சென்னை :

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமிக்கு விருது அளித்தால் அந்த விருதுக்குத்தான் பெருமை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.

சிறுவயதில் இருந்து தான் ரசித்துப் பார்த்த திரைப்படங்கள் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தனிச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், திரைப்படஇயக்குநர் சீனுராமசாமியை பாராட்டி வைகோ தெரிவித்திருப்பதாவது:

“இயக்குநர் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, கள்ளிக் காட்டுச் சீமையின் வாழ்க்கையை ஒரு தாயின் உழைப்பைப் பற்றிப் பேசிய நேர்த்தியான படைப்பு. இந்தப் படத்தில் வரும் கிராமிய வாழ்க்கையைப் பார்த்து என் இளமை நாட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. ‘நீர்ப்பறவை’. கடற்கரை ஓர மீனவர் வாழ்க்கையை, ‘படகோட்டியிலும்’, ‘கடலோரக் கவிதைகளிலும்’ நான் கண்டிருந்தாலும், ‘நீர்ப்பறவை’ ஆஸ்கர் விருதுபெற வேண்டிய படம் ஆகும். ‘நீர்ப்பறவை’ உயிர்க் காவியத்தை நான் பார்த்தபோது, ஐந்து இடங்களில் கண் கலங்கி அழுதேன்.

மொழி அறியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்தால், பிற நாட்டினர் கண்டால் அவர்கள் நெஞ்சத்தை உலுக்கும். தென்கொரிய மக்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கினார்களாம்! இந்தக் காவியத்தைத் தந்தவன் ஒரு தமிழன் என்பதால்தானோ இதற்கு தேசிய விருது கிடைக்கவில்லை போலும். பாச மலரைப் போல், ஞான ஒளியைப் போல், நெஞ்சில் ஓர் ஆலயத்தைப் போல், தொடங்கிய நிமிடத்தில் இருந்து முடியும் வரை என்னை முழுமையாக உலுக்கிய படம் ‘தர்மதுரை’ எனும் வெள்ளித்திரை உயிர் ஓவியம் ஆகும்.

சீனு ராமசாமி

நடிகர் திலகத்திற்குப் பின்னர், திரைப்படத்தைப் பார்க்கும்போதே கதாபாத்திரம் என் இருதயத்திற்குள் ஊடுருவி அசைத்த நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான்.

மொட்டை மாடியில் முன்னிரவில் மது அருந்திய மயக்கத் தூக்கத்தில் இருந்து அக்காளின் சின்னமகளான சின்னஞ்சிறுமி, காப்பி கொடுத்து எழுப்பும் காட்சி; மது போதையில் சவ ஊர்வலத்தில் ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து ஆடும் தோற்றம்; தம்பிகளோடும், மாமனோடும் மல்லுக்கட்டும் வேளை, உலக வாழ்க்கையில் தாயை விட உன்னதமான ஓர் உயிர் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் ராதிகாவின் இயல்பான நடிப்பும் சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ள வைகோ, தர்மதுரை படத்தின் காட்சிகளை ரசித்து எழுதியுள்ளார்.

அதோடு, “சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அது அந்த விருதுக்குத்தான் பெருமை!” என்று வைகோ தெரிவித்துள்ளார்.“

மேலும், “இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய் சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளைக் குவிக்கும்” என்று விஜய் சேதுபதியையும் பாராட்டியுள்ளார்.
English Summary
If seenu ramaswamy gets award, it is a credit to the award