டில்லி
மத்திய அமைச்சரும் நாக்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி பாஜகவின் செயல்பாடுகள் சரி இல்லை எனில் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் வரும் மே மாதம் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் மும்முரமாக உள்ளன. பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாஜக அரசு இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ஏழை விவசாயிகளுக்கான வருடாந்திர ஊக்கத்தொகையான ரூ.6000 ல் முதல் தவணையாக ரூ.2000 பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டத்தின் படி வருடம் ரூ.72000 கட்டாய ஊதியம் வழங்கும் திட்டம் ஏழை மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. இது பாஜகவுக்கு கடும் பின்னடைவை உண்டாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் எதிர்க்கட்சிகள் பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியை கடுமையாக குறை கூறி வருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக பல பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சரும் நாக்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் நிதின் கட்கரி, “இந்த தேர்தல் எங்களின் ஆட்சிக்கு ஒரு தேர்வாகும். இந்த ஐந்து வருடத்தில் ஆளும் கட்சியாக எங்கள் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பதை மக்கள் ஆராய வேண்டும். மக்கள் நாங்கள் சரிவர செயல்படவில்லை நினைத்தால் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.
என்னை பொறுத்தவரை நான் திறம்பட கட்சி வேறுபாடு பார்க்காமலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமலும் நடந்துக் கொண்டுள்ளேன். நான் மக்களிடம் எப்போது எனது இந்த ஐந்து வருட ஆட்சி என்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனி தான் நீங்கள் பார்ப்பீர்கள் என விளையாட்டாக கூறுவேன்.”என தெரிவித்துளார்.