சென்னை :
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று திடீரென சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளை ஆய்வு செய்ததார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் டெங்கு பரவ உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என்று தமிழக அரசுமீது குற்றம் சாட்டினார்.
அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் இதுவரை 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே மாநிலம் முழுவதும் டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார்.
முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்திருந்தால், மாநிலம் முழுவதும் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும். அதன் காரணமாக டெங்கு காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
ஆனால், மாநிலத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறார். ஸ்டான்லி மருத்துவமனை யில் மட்டும் 25 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குடிக்க தண்ணீர்கூட இல்லை என்றும், நோயாளிகளுக்கு போதுமான வசதி இல்லை. ஆனால், குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி அரசு இதனை கண்டு கொள்ளவில்லை என்றும், தமிழக அமைச்சர்களோ எந்தத் துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.