சென்னை:
மாதம் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்டிஎப்சி, ஐசிஜசிஜி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. ஒரு மாதத்தில் வங்கி கிளைகளில் நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்டிஎப்சி அறிவித்துள்ளது.
கணக்கு வைத்துள்ள கிளை தவிர மற்ற கிளைகளில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ஹெச்டிஎஃப்சி கூறியுள்ளது. இந்த கட்டணம் வங்கி கிளைகளில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு முன்பு இருந்த கட்டணங்களே பொருந்தும் என்றும் ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் முதல் நான்கு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.150ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியை பொறுத்தவரை முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அதன் பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.