ஐதராபாத்
வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதிக்கு மேற்பட்டோர் இங்கு வங்து விடுவார்கள் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி உள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி கடந்த 2014 ஆம் வருடம் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள், கிறித்துவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க உள்ளது. இதற்கு பாஜக அல்லாத பல மாநில ஆளும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவற்றில் தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் ஒன்றாகும்.
நேற்று ஐதராபாத் நகரில் சந்த் ரவிதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துக் கொண்டார். அவர் தனது உரையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு மனிதாபிமான அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மதரீதியாகத் துன்பம் அனுபவித்து இந்தியா வந்த சிறுபான்மையினர் நலனுக்காக அமலாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி ஆர் எஸ்), காங்கிரஸ் போன்ற கட்சிகள் இது நாட்டில் ஊடுருவி உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்கச் சொல்லுகின்றனர். அதைப் போல் டி ஆர் எஸ் கட்சியின் தோழமைக் கட்சியான அசாதுதின் ஓவைசியின் கட்சியும் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு இதே கோரிக்கையை வைக்கிறது. அகதிகள் வேறு ஊடுருவுபவர்கள் வேறு என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கின்றனர்
இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் டி ஆர் எஸ் உள்ளிட்ட கட்சிகள் இதை வங்கதேச மக்களுக்குப் பயன்படுத்த நினைக்கின்றனர். நான் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ரெட்டிக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்தியக் குடிமக்கள் 130 கோடி பேருக்கு இந்த சட்டத்தினால் தீங்கு உண்டாகும் எஅன் அவர் நிரூபிப்பாரா? அப்படி நிரூபித்தால் மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்பப் பெறப் பரிசீலனை செய்யும்.
வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கும் என்றால் அந்த நாட்டில் பாதி காலி ஆகி விடும். அந்நாட்டினரில் பாதிப் பேர் இந்தியாவில் குடியேறி விடுவார்கள். அதன் பிறகு நடப்பதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டி பொறுப்பு ஏற்பாரா? அல்லது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.