சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற டிடிவி தினகரன், தான் ஒருபோதும்  குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைத்ததில்லை என்று;, தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் ஆவேன்  என்று   கூறி உள்ளார்.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதற்காக, தனக்கு வாக்காளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று இரவு ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில்  41-வட்டத்துக்கு உட்பட்ட வைத்தியநாதன் பாலம் சந்திப்பு, அஜீஸ் நகர், சிவாஜி நகர், எண்ணூர் நெடுஞ்சாலை, அண்ணா நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்  திறந்த வாகனத்தில்  சென்று  அவர் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடமிருந்து சம்மன் வந்திருப்பதாகவும், நிச்சயம் ஆஜராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், பேருந்து கட்டண உயர்வு மக்கள் மீது நடத்தப்பட்ட கொரில்லா தாக்குதல் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் ஏற்றுக்கொள்ளும்வகையில் பேருந்துக் கட்டணம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள், தாங்கள் குறுக்கு வழியில் முதல்வர் பதவியை பிடிக்க திட்டமிடுவதாக அதிமுகவினர் கூறுவதாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன்,  குறுக்கு வழியில் முதலமைச்சராக நான் என்றும் நினைத்ததில்லை. அதை விரும்புவதும் இல்லை என்றார்.

எங்கள் கட்சி 234 தொகுதிகளிலும்  போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே நான் முதலமைச்சர் ஆவேன். இவர்களைப்போல சசிகலா வழங்கிய முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு நாடகமாட எனக்கு தெரியாது என்றும் கூறினார்.

காவிரி விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் கூறுவது அனைத்தும் நாடகம்  என்ற  டிடிவி தினகரன், முதலமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதுபோல நாடகமாடி வருகிறார். மத்திய அரசின் கைப்பாவைகளாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.