“எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம்” என்று சீமான் கூறியுள்ளார்.
பெரியார் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு அமைப்பினர் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஈ.வெ.ரா., குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன். என் மீது எல்லா இடங்களிலும் வழக்கு பதிவு செய்து சோர்வடைய செய்ய அரசு முயற்சி செய்கிறது” என்றார்.
“எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன், அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன். யாருக்கு பயம்? இதுக்கெல்லாம் நான் பயப்படுறவன் கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளுவேன். ஒரே நீதிமன்றத்தில், ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
நாளை விக்கிரவாண்டிக்கு ஒரு வழக்கிற்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு வழக்காக எதிர்கொள்வேன். ஒரு ஆள் தான் இருக்கிறேன். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, என்னை மாதிரி நான்கு, ஐந்து பேரை உருவாக்கி அனுப்ப முடியாது. என்னால் தான், அவர்களுக்கு நெருக்கடி. அதிகாரத்தில் இருப்பவர்கள் இது நிலையானது என்று நினைப்பது சிரிப்பாக இருக்கிறது.
எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். என்னை ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைத்து, என்னை உறுதியாக நிற்க வைத்தது கருணாநிதி தான். இப்பொழுது எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம்” என்று கூறினார்.