டில்லி

முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பர்ம் பாஜக அரசை கடுமையாக தாக்கி உள்ளார்.

 

முன்னாள் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஃபேல் விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பொறுமையாக பதில் அளித்தார்.

ப சிதம்பரம் தனது பதிலில், “ரஃபேல் போர் விமானங்கள் வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அவசியம் தேவையாகும். முதலில் 126 விமானங்களை வாங்கை முடிவு செய்த அரசு பிறகு அதை ஏன் 36 ஆக குறைத்தது? அதற்கான உண்மைக் காரணம் என்ன?

பாஜக அரசு முடியும் நாள் நெருங்கி விட்டது.  அந்த ஆட்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்நிலையில் இடைக்கால நிதி அறிக்கையில் பல திட்டங்களை அறிவிக்க அரசு முயன்று வருகிறது. ஆனால் பாஜக என்ன செய்தாலும் 60 நாட்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இனி இந்த அரசிடம் இருந்து எந்த ஒரு நன்மையையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது.  பாஜக அரசால்  நாட்டின் பொருளாதாரம் மிகவும் அபாயநிலைக்கு சென்றுள்ளது. நான் தற்போது நிதி அமைச்சராக இருந்திருந்தால் உடனடியாக ராஜினாமா செய்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.