வாஷிங்டன்

மெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  இதில்  அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ,ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பு  மிக அதிகமாக  உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது  இங்கு 3 லட்சத்துக்கு மேல் பாதிப்பும் 10 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

வரும் இரு வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு மிக அதிக அளைவ்ல் இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே கூறி உள்ளார்.  தற்போது கொரோனா பாதிப்புக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மாத்திரைகள் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடிக்குத் தொலைப்பேசி மூலம் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் இங்கும் அந்த மருந்து அதிக அளவில் தேவைப்படுகிறது.   ஆகையால் இந்த மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம், ”இந்தியப் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிறு அன்று தொலைப்பேசியில் பேசிய போது நாங்கள் ஆர்டர் அளித்த ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை உடனடியாக அனுப்பினால் நல்லது எனத் தெரிவித்தேன்.

இந்தியா நமது நட்புநாடு என்பதால் மருந்தை அனுப்பும் என நம்புகிறேன்.   ஒரு வேளை இந்தியா மருந்தை அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை.  அதேசமயம் அதன் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்.  வேறு விதமாக இந்திய நினைத்தால் அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.