சென்னை,

திமுகவுக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று தமிழக மீனவளத் துறை அமைச்சர்  ஜெயக்குமார் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை  சுமார் 42 படகுகள் மீட்கப்பட்டுள்ளன, இதில்  8 படகுகள் மட்டுமே இலங்கையில் இருந்து  தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 131 படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக முதல்வர் வலியுறுத்தி வருவதாக கூறினார்.

மேலும், எடப்பாடி அரசு பெரும்பான்மையோடு செயல்படுகிறது, தனிப்பட்ட முறையில் முதல்வர் பழனிசாமியை விமரிசிப்பது சரியல்ல என்று கூறினார்.

தற்போது சட்டமன்றத் தேர்தல் வருவதை  திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லை என்றும், அவர்கள் கட்சிக்குள்ளேயே பெரும்பான்மை நிரூபிக்க  ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினே தோற்றுவிடுவார் என்றும்  கூறினார்.

மறைந்த முதல்வர் வாழ்ந்த வேதா இல்லம் விரைவில்  பொதுமக்களின் பார்வைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,

சட்டத்திற்கு உட்பட்டுதான் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டத்திற்கு உட்பட்டவர்கள் காவல்துறையைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.