நாமக்கல்: டீசல் மற்றும் சுங்க கட்டணத்தை குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் டீசல், பெட்ரோல், எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இதனால், சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
இதன் காரணமாக விலைவாசிகள் உயர்ந்து வருகின்றன. மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், வகையில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்கம் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.
தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கோபால் நாயுடு, பொதுச்செயலாளர் ஜி. ஆர். சண்முகப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டீசல், சுங்கக்கட்டணம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சண்முகப்பா, டீசல் மற்றும் சுங்க கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைக்க ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்படுகிறது.
‘கொரோனா தொற்று காரணமாக லாரி தொழில் அடியோடு முடங்கி உள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 26 லட்சம் லாரிகளில் சுமார் 6 லட்சம் லாரிகள் மட்டுமே தற்போதைய நிலையில் இயங்கி வருகின்றன.
ஆனால், டீசல் விலை உயர்வால், அவற்றையும் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். டீசல், டாலருக்கு மேல் 220 சதவீதம் உயர்ந்துள்ளது. இவை தவிர்த்து வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும். அதேபோல் சுங்க கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.
இவை தவிர்த்து மாநில அளவிலான கோரிக்கைகளை அந்தந்த மாநில முதல்வர்களிடம் கோரிக்கைகளாக அளித்துள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளையும், டீசல் மற்றும் சுங்கக் கட்டணத்தையும் மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்டு 9-ஆம் தேதிக்குள் குறைக்காவிட்டால் மீண்டும் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.