தஞ்சாவூர்: தொடர் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக, 33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ந்தேதி தொடங்கி அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போத காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் தஞ்சை மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3300 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 7681 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் அளவிற்கு கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. முதல் கட்ட கணக்கீட்டில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதாலும், மழை தண்ணீர் வடியாததாலும் பயிர்கள் மூழ்கியுள்ளது. தற்போது வேளாண் துறை அதிகாரிகள் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . 33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.