மும்பை: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா என்பது உலகின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட நாடு என்றாலும், மக்கள் அடர்த்தியைப் பொறுத்தவரை, சீனாவை முந்தி முதலிடத்தில் இருக்கும் நாடாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள் கூடுகை நிகழ்வுகளை தடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றை மூடலாம், திருவிழாக்கள் மற்றும் இன்னபிற விழாக்களை ரத்துசெய்யலாம். வழிபாட்டு இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்காம் அல்லது மூடலாம்.
ஆனால், மக்களின் அன்றாடப் பொருளாதார தேவைகளை என்ன செய்வது? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, எளிய பொருளாதார சூழலில் வாழும் மக்கள் ஏராளமான கோடி பேர். அவர்களின் ஜீவனத்தை நடத்தக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் இடம்விட்டு இடம் நகர்வதையும், கூடுகைகளையுமே சார்ந்துள்ளது.
எனவே, அவை முடக்கப்படுவதானது, அந்த மக்களின் பொருளாதாரத்தையே முடக்குவதாகும். இதன்மூலம் அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகும். வீட்டிலிருந்தே பணி செய்தல் என்ற நடைமுறைக்கும், அந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
மேலும், இந்தியாவின் திட்டமிடப்படாத நகர்ப்புற மக்கள் தொகைப் பெருக்கம், சீனாவுடன் ஒப்பிடும்போது மிக மோசமான உள்கட்டமைப்பு வசதி, இந்திய அரசு இயந்திரத்தின் மெத்தன செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், கொரோனா பெருக்க வேகம் தீவிரமெடுத்தால் நிலைமையை கற்பனைக்கெட்டாத அளவில் மோசமாக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
எனவே, இதற்கான பதில் எந்தளவிற்கு இந்திய நிர்வாகத்திடம் இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.