டில்லி
தமக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியா பயன்பெற தாம் மீண்டும் பணி புரிய தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநரான ரகுராம் ராஜன் கடந்த 2013 ஆம் வருடம் செப்டம்பர் முதல் பணி புரிந்து வந்தார். அவர் 2016ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அவர் கடந்த 2003 முதல் 2006 ஆம் வருடம் வரை ஐ எம் எஃப் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தற்போது அவரைப் பற்றி நிறைய ஊகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமானது எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ரகுராம் ராஜன் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதாகும். ஏற்கனவே இவருக்கு பாஜக அரசு மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி ஏற்க அழைத்த போது அதை ரகுராம் ராஜன் மறுத்துள்ளார். தாம் இருக்கும் இடத்தில் மிகவும் மகிழ்வுடன் உள்ளதாக அப்போது தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவில் பேராசிரியராக ரகுராம் ராஜன் பணி ஆற்றுகிறார். இவரை காங்கிரஸ் கட்சி அமைக்க உள்ள குறைந்த பட்ச ஊதிய உத்திரவாத திட்டத்துக்கு உதவ வருமாறு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் வருமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 ஊதியம் கிடைக்க வழி செய்யப்பட உள்ளது.
இந்த ஊகங்கள் குறித்து ரகுரம் ராஜன், “தற்போது இந்த யூகங்கள் பற்றி பேசுவது சரி இல்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முக்கியமானது எனவும் இதன் மூலம் ஒரு புதிய மாறுதல் ஏற்படும் எனவும் நான் எண்ணுகிறேன். நான் எனது கருத்துக்களை கேட்போருக்கு அதை சொல்லி வருகிறேன்.
தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பல பொருளாதார நிபுணர்கள் கூடி முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நானும் அதில் ஒருவன். நான் இதற்கான குறுகிய கால திட்டங்களை தீட்டி பெரிய திட்டங்களை நிறைவேற்ற தயாராக உள்ளேன். எனது சேவை இந்தியாவுக்கு தேவை எனில் நான் மீண்டும் இந்திய அரசியலிலும் பணி ஆற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.