இஸ்லாமாபாத்
பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்தியா வர்த்தக தடை விதித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது..
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செய்தியாளர்களிடம், “இந்திய மக்களவை தேர்தலில் பாஜக வென்று மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவ்வாறு பாஜக ஆட்சி அமைத்தால் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடங்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும்.
ஒரு வேளை அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அவர்கள் வலதுசாரிகளின் போக்குக்கு அஞ்சி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பிரசனையில் தீர்வு காண மாட்டார்கள் என தோன்றுகிறது. எனவே வலதுசாரியான பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீ ர் பிரச்னைக்கு முடிவு வரலாம் என தோன்றுகிறது.
பாஜக காஷ்மீர் இஸ்லாமியர்களை ஒரு மாதிரியும் மற்ற பகுதி இஸ்லாமியர்களை வேறு மாதிரியும் நடத்தி வருகிறது. முன்பு நான் அறிந்த இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவில் மகிழ்வுடன் இருந்தனர். இபோதைய இந்துத்வா போக்கினால் அவர்கள் கவலையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழியில் மோடியும் பயத்தையும் தேசிய உணர்வையும் தூண்டி விட்டு தேர்தலை சந்தித்து வருகிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர் சொத்துக்களை வாங முடியாது என்னும் 370 சட்ட விதியை மாற்ற உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வேளை இந்த அறிவிப்பு தேர்தல் ஆதாயத்துக்காக இருக்கலாம்.
தேர்தல் ஆதாயத்துக்காக இந்திய அரசு பாகிஸ்தான் மீது தேர்தல் முடிவதற்குள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதலை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.