சென்னை:
செப். 12 ஆம் கூடும் பொதுக்குழுவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்றும், மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு வரும் 12ந்தேதி கூடும் என்று எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
அதன்டிபடி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி சந்தித்து ரகசிய ஆலோசனை செய்து வருகிறார். அதேவேளையில், டிடிவியும், அவரது குடும்ப உறுப்பினர்களும், நாங்களும் பொதுக்குழுவை கூட்டுவோம் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
அதிமுகவின் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுக்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும்,
கழகத்தின் உண்மைத் தொண்டர்கள் யாரும் அதை நம்பவேண்டாம். அப்படி நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், செப்டம்பர் 12ஆம் தேதி பொதுக்குழு கூடும் என்று அறிவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தியாகத்தலைவி சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.