டில்லி
ஆம் ஆத்மி கட்சி டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் டில்லி தனி மாநிலமாக மாறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வருகிறது. டில்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் அம்மாநில துணை நிலை ஆளுநருக்கு முதல்வரை விட அதிக அதிகாரம் உள்ளது. இது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிருப்தி அளித்து வருகிறது.
நேற்று டில்லியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இந்த பேரணியில் ஏராளமான பொது மக்களும் ஆம் ஆத்மி கட்சியினரும் கலந்துக் கொண்டனர்.
பேரணியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், “நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்கள் பிரதமருக்காக வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் டில்லியில் உள்ள பிரச்னைகளுக்காக நீங்கள் வாக்களிக்க்க வேண்டும். உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்க வேண்டும்.
டில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியனரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால் இரண்டே வருடங்களில் டில்லி யூனியன் பிரதேச நிலையில் இருந்து தனி மாநிலமாக மாறும்” என தெரிவித்துள்ளார்.