சென்னை:
ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளும் இந்த ஆண்டு இறுதியோடு முடிவடைகிறது. அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் கொண்டு வரப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடி ரேசன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவர்களுக்கு 34,686 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்ட்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆதார் எண் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெற்று வருகிறது. 70சதவித ரேசன் கார்டுகள் மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்புடன் கூடிய விற்பனை இயந்திரத்தில் (பாயின்ட் ஆப் சேல்ஸ் மிஷின்) குடும்ப அட்டை எண், உறுப்பினர்களின் எண்ணிக்கை, செல்போன் எண், அட்டையின் வகை, எரிவாயு விவரம் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க ேரஷன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு கிடையாது, ரேசன் அட்டையில் மேலும் ஒரு ஆண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என பரவலாக வதந்திகள் பரவியது.
இதையடுத்து, ரேசன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழியாக சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஆதார் எண் விவரங்களை தெரிவித்த வர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க உணவு வழங்கல் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது,
“வருகிற 1ம் தேதி முதல் ரேஷன் வாங்க வருபவர்கள் ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும். ஆனால் பொருட்கள் வாங்குவது பற்றிய தகவல் கார்டில் பதிவு செய்யப்பட மாட்டாது. ரேஷன் கடைகளில் உள்ள ஆதார் எண் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் மட்டுமே, என்னென்ன பொருட்கள் வேண்டும் என்ற தகவல் பதிவு செய்யப்படும்.
பதிவு செய்ததும், ஆதார் எண் தகவல் அடிப்படையில், குடும்ப உறுப்பினர் கொடுத்துள்ள செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும். அதை காட்டியே பொருட்கள் பெற வேண்டும்.
இதுவரை ஆதார் எண் தகவல்களை ரேஷன் கடைகளில் வழங்காதவர்கள், நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைகளில் அனைத்து தகவல்களையும் வழங்கிய பிறகே பொருட்கள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர்” என்றனர்.
ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எக்காரணத்தை கொண்டும் 2017ம் ஆண்டு ஜனவரியில் தற்போதுள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டக்கூடாது என்றும், அதற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel