சிம்புமின் மீதான சர்ச்சைகள், காதல்களைக்கூட கணக்கிட்டுவிடலாம், அவரது “இது நம்ம ஆளு” பட ரீலீஸ் தேதிகளை கணக்கிடவே முடியாது. ஒருவழியாக இழுத்தடித்து இன்று ரீலீஸ் ஆகிவிட்டது.
ஒன்ஸ் அப் ஆன் ய டைம்… காதலர்களாக அறியப்பட்ட சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் படம்… பாண்டிராஜ் இயக்கம்…. ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோர் நடித்திருப்பது… சிம்புவின் தம்பி குறளரசன் இசை… என்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிம்பு, அவருடன் படம் முழுவதும் பயணிக்கும் சூரி, சிம்புவை திருமணம் செய்துகொள்ள பெற்றோர்களாக நிச்சயக்கப்பட்ட பெண்ணாக நயன்தாரா என்று கட்டு செட்டாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாண்டிராஜ்.
தன்னை சிம்பு பெண் பார்க்க வந்த போதே அவரது முன்னாள் காதலை அறிந்துகொள்கிறார் நயன். ஆனாலும் திருமணத்துக்கு ஓகே சொல்கிறார்.
அதன் பிறகு இருவரும் “நீயின்றி நானிலலை..” என்று உருகி உருகி காதலிக்கிறார்கள். இருவரின் போன் காதல் ரசிக்க வைக்கின்றது. (இடையில் வரும் சூரியின் கலாட்டாக்கள் ரசித்து சிரிக்க வைக்கின்றன.)
முன்னாள் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. பிறகு ஊடல் கூடலாகும் நேரம்… இருவரின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை வெடித்து திருமணம் நிறுத்தப்படுகிறது.
தடைபட்ட திருமணம் நடந்ததா… என்பதே படத்தின் மீதிக்கதை.
கெமிஸ்ட்ரியோ, பிசிக்ஸோ… படத்தில் சிம்பு, நயன் இருவரும் நிஜக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
விரல் சொடுக்கு, பஞ்ச் டயலாக் என்று வழக்கமாக எரிச்சலூட்டும் சிம்பு, இந்த படத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு ரசிக்கவைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
சிம்புவின் வழக்கமான படங்களில் இருக்கும் தெனாவெட்டு, பிரமாதமான நடிப்பு என இதில் எதுவும் இல்லை. நார்மலாக கதைக்கு ஏற்றது போல் நடித்திருக்கிறார்.
நயன்தாராவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். (வயதே ஏறாதா அக்கா உங்களுக்கு?).
பிளாஷ்பேக்கில் வரும் ஆண்ட்ரியாவுக்கு பெரிய வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். கெஸ்ட் ரோலில் வரும் சந்தானம் வழக்கம் போல் கொஞ்சம் எரிச்சல்படுத்திவிட்டுப் போகிறார்.
சிம்புவுடன் படம் நெடுகிலும் வரும் சூரி, கலகலக்க வைக்கிறார்.
குறளரசன் இசை அப்படி ஒன்றும் ஈர்க்கவில்லை.
சின்ன பசங்களை வைத்து மட்டுமல்ல.. பெரிய பசங்களை வைத்தும் சிறப்பாக இயக்குவேன் என்பதை நிரூபித்திருக்கிறார் பாண்டிராஜ். வசனங்களும் அருமை.
மொத்தத்தில்… ரசிக்க வைக்கும் படம்.