பெங்களூரு:

பெங்களூருவில் இன்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனால் 1 மில்லியன் டாலர் பரிசு இந்திய அணிக்க கிடைக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் 188 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயம் செய்தது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 35.4 ஓவர்களில் 112 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் சுருட்டினர். இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய மண்ணில் 25வது விக்கெட்டை வீழத்தி சாதனை படைத்தார். அதிக ரன் வித்தியாசத்தில் இந்தியா இந்த வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டி தர வரிசை பட்டியலில் முதலிடத்தை இந்தியா மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை மீண்டும் தக்க வைப்பதற்கான காலக்கெடு வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை உள்ளது.

முதலிடத்தை வீராட்கோலி தலைமையிலான அணி மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளது. பெங்களூரு வெற்றி மூலம் இந்திய அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.