துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில், விராத் கோலி 5வது இடத்திற்கு சரிந்துவிட்டார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலமாக, மொத்தம் 883 புள்ளிகளைப் பெற்று, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3வது இடத்திற்கு முன்னேறிவிட்டார்.
விராட் கோலி 852 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.ஆஸ்திரேலியத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடததன் காரணமாக ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து கோலி பின்தங்கி சென்று வருகிறார். 2-வது இடத்தில் இருந்த கோலி, தற்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப்பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரூட் இந்த அளவு உயர்வு பெறுவது இதுதான் முதல்முறையாகும்.
2வது இடத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை பிடிக்க இன்னும் ஜோ ரூட்டுக்கு 9 புள்ளிகள்தான் தேவை. முதலிடத்தில் இருக்கும் வில்லியம்ஸனைப் பிடிக்க 36 புள்ளிகள்தான் தேவையென்பதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவதற்குள் ஜோ ரூட் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 86 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 746 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ரிஷப்பந்த் 91 ரன்கள் சேர்த்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்து 13வது இடத்தில் நீடிக்கிறார். அரைசதம் அடித்த ஷுப்மான் கில் 7 இடங்கள் முன்னேறி 40வது இடத்தையும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் நகர்ந்து, 81வது இடத்தையும் பிடித்துள்ளனர்.