துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டி-20 தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் விராத் கோலி, ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி, 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, டி-20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலி 762 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரோகித் ஷர்மா 613 புள்ளிகளுடன் 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டன் மோர்கன் ஒரு இடம் நகர்ந்து 24வது இடத்துக்கும், பென் ஸ்டோக்ஸ் 64வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.
இந்திய வீரர் ஷிகர் தவான் 98 ரன்கள் விளாசியதையடுத்து, இரு இடங்கள் நகர்ந்து 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் நகர்ந்து, டாப் 20 வரிசைக்குள் நுழைந்துள்ளார்.