உலகக்கோப்பை ஒருநாள் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி 10 நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களில் நடைபெறுகிறது.
அக்டோபர் 5 ம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி வரை 46 நாட்கள் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற உள்ளது.
அகமதாபாத், ஹைதராபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் தவிர தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் முதல் இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி இடம்பெறுமா என்பது இந்த தகுதிச் சுற்றுப்போட்டிகளுக்குப் பிறகே தெரியவரும்.
முதல் போட்டி அக்டோபர் 5 ம் தேதி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் நான்கு லீக் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 5 போட்டிகள் இங்கு நடைபெறுகிறது.
தவிர, இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டியும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15 ம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.
தர்மசாலா-வில் 5 லீக் போட்டிகள், டெல்லி 5, சென்னை 5, லக்னோ 5, புனே 5, பெங்களூரு 5, மும்பை 4, கொல்கத்தா 4, அகமதாபாத் 4, ஹைதராபாத் 3 போட்டிகள் நடைபெற உள்ளது.
மும்பை-யில் முதல் அரையிறுதி ஆட்டமும், கொல்கத்தா-வில் இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் நடைபெற உள்ளது.
சென்னையில் அக்டோபர் 8 ம் தேதி ஞாயிறன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14 நியூஸிலாந்து – பங்களாதேஷ், அக்டோபர் 18 நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23 ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான், அக்டோபர் 27 பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டி நவம்பர் 19 ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.