கார்டிப்:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து இறுதி போட்டியில் இன்று நடைபெற இருக்கும் இந்தியா  வங்கதேசம் இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இறுதிபோட்டியில் களம்காண தயாராகி வருகிறது.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும் தொடங்கினர். ஹாலெஸ் 13 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜோ ரூட் இறங்கினார். 16 ஓவர்களில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் நிதானமாகவே ஆடி வந்தது. இரண்டு முறை கேட்சிலிருந்து தப்பித்த பேர்ஸ்டோவின் (43 ரன், 57 பந்து, 4 பவுண்டரி) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஹசன்அலி தூக்கினார்.

பாகிஸ்தான் பவுலர்களின் அதிவேக பந்துவீச்சில்  இங்கிலாந்து அணியினர் தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.

எப்போதும் அதிரடி காட்டக்கூடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த முறை தள்ளடாட்டம் போட்டனர். ஜோ ரூட் 46 ரன்னிலும் (56 பந்து, 2 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 33 ரன்களிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட் வெளியேறிக் கொண்டே இருந்தது.

முடிவில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ருமான் ரயீஸ், ஜூனைட்கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து  211 ரன்கள் எடுத்து.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி  212 ரன்கள் இலக்குடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் பஹார் ஜமானும், அசார் அலியும் இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர்.

17.2 ஓவர்களிளேயே பாகிஸ்தான் அணி  100 ரன்களை எட்டியது. சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

ஸ்கோர் 118 ரன்களாக உயர்ந்த போது பஹார் ஜமான் 57 ரன்களில் (58 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் அசார் அலி 76 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி வெற்றியை சுபலமாக்கினார்.

பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாபர் அசாம் 38 ரன்களுடனும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது ஹபீஸ் 31 ரன்களுடனும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது.

இதன் முலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிபோட்டியில்,  இந்தியா அல்லது வங்காளதேசம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் பாகிஸ்தான் அணி 18-ந்தேதி மோதுகிறது.