துபாய்: வரும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை தேர்வுசெய்யவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டிகளான உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் ஐசிசி அமைப்பால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த உலகக்கோப்பைத் தொடர் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் இடம்பெறும். போட்டியை நடத்தும் நாடான இந்தியா இயல்பாகவே தகுதிபெறும். இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அயர்லாந்து உள்ளிட்ட மொத்தம் 13 அணிகள் இடம்பெறும்.
இதில், நாக்-அவுட் போட்டிகள் கிடையாது. தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் முதலில் தேர்வுசெய்யப்பட்டு, பின்னர், எஞ்சிய 5 அணிகள் மோதும் போட்டிகள் மூலம் இதர 2 அணிகள் தேர்வுசெய்யப்பட்டு, மொத்தம் 10 அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கும்.
ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளிகள் வழங்கப்படும். ‘டை’ மற்றும் கைவிடப்பட்ட போட்டிகளுக்கு தலா 5 புள்ளிகள் வழங்கப்படும். இரு அணிகள் சமஅளவு புள்ளிகள் பெற்றிருந்தால், ரன் ரேட் கணக்கிடப்படும். ‘நோ பால்’ வீசப்படுவதை கண்காணிக்க மூன்றாவது அம்பயர் முறை கணக்கிடப்படவுள்ளது.