டெல்லி:  நாடு முழுவதும் மே 21ந்தேதி  நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பட்டய கணக்காளர்களுக்கான இறுதித்தேர்வும், இடைநிலைதேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா 2வதுஅலையின் தீவிர தாக்கம் காரணமாக ஜெஇஇ, முதுகலை நீட் தேர்வு, ஐஐடி தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து .ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தால் நடத்தப்பட்டு வரும்  சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உளளது.

இது குறித்து, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட அறிக்கையில்,   கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் துவங்க இருந்த, சி.ஏ., இறுதித் தேர்வும், இடைநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்படுகின்றன.தொடர்ந்து, கொரோனாவால் நிலவும் சூழல் கண்காணிக்கப்பட்டு, அதற்கேட்ப தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். தேர்வுகள் நடப்பதற்கு, 25 நாட்களுக்கு முன், புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான சிஏ இறுதித் தேர்வுகள், மே 21ம் தேதி துவங்குவதாக இருந்தன. இதேபோல், இடைநிலைத் தேர்வுகளை, மே 22ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.