டெல்லி: ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.
ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி இருப்பதாவது:
ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் என்ற வெப் சீரிஸ் இந்து கடவுளை இழிவுபடுத்துவதாக சர்ச்சை எழுந்தது. எனவே அதனை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.