சென்னை:
சென்னை ஐ.ஏ.எஸ். மாணவி காயத்திரி தற்கொலை செய்துகொண்டதற்கு அவரது அக்காள் கணவரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – அருளழகி. இவர்களுக்கு காயத்திரி, வினோத்குமார் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இவர்களில் காயத்திரி, பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையின் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். லோட்டஸ் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி விசம் ( அரளிவிதை) உண்ட நிலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள எஸ்.கே.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 20ம் தேதி மரமணடைந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டதாகவும், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் டார்ச்சர் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறி அவரது உறவினர்கள் சேலத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், காயத்திரியுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறும் சங்கீதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“கடந்த 18ம் தேதி இரவு, விடுதி அறையில் இருந்த காயத்திரி, தனது மாமா பிரபு கீழே வந்திருப்பதாகச் சொல்லி சென்றாள்.
நீண்ட நேரம் ஆகியும் வராத நிலையில், புதிய எண்ணில் இருந்து எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், “காயத்திரியின் அக்காள் கணவர் பிரபு பேசுகிறேன். விடுதி அறைக்குக் கீழேதான் நானும், காயத்திரியும் பேசிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் பிரச்சினை. காயத்திரி, அரளி விதைகளை (விசம்) தின்றுவிட்டதாக கூறுகிறாள். உண்மையான, பொய்யா என்று தெரியவில்லை. கீழே வாருங்கள். அவளுக்கு ஆறுதல் கூறுங்கள். ஏதேனும் பிரச்சினை என்றால் எனக்கு போன் செய்யுங்கள்” என்று கூறினார்.
இதையடுத்து கீழே வந்து, காயத்திரியிடம், “உண்மையிலேயே விசம் அருந்தினாயா…. அனைவருக்கும் பிரச்சினை ஆகிவிடும்.. சொல்” என்று கேட்டேன்.
அதற்குக் காரயத்திரி, அரளி விதையை தின்றுவிட்டதாக கூறினாள். உடனே நான் அவளது அக்காள் கணவர் பிரபுவுக்கு போன் செய்து சொன்னேன்.
அவர், அருகில் இருக்கும் எஸ்.வி. எஸ்.. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அங்கு காயத்திரியை தோழிகளுடன் சேர்த்து அழைத்துச் சென்றேன்.
அப்போது காயத்திரியின் மாமா அங்கு வந்தார். காயத்திரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டாள்.
இது குறித்து காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் சொல்லும்படி அவளது அக்காள் கணவன் பிரபுவிடம் கூறினேன். அவர், “ அங்குதான் தற்போது என் மனைவி ஜோதி (காயத்திரியின் அக்காள்) இருக்கிறாள். இந்த இரவு நேரத்தில் போன் செய்தால் பதட்டப்படுவார்கள்” என்று சொல்லி மறுத்தார்.
ஆகவே அவரிடம் காயத்திரியின் அப்பாவின் எண் வாங்கி, அவருக்கு தகவல் கூறினேன். மறுநாள் (19ம் தேதி) மதியம் காயத்திரியின் அக்காள் ஜோதி மருத்துவமனை வந்தார். அன்று இரவு காயத்திரியின் அப்பா நாகராஜ் அம்மா அருளழகி ஆகியோர் வந்தார்கள்.
சிகிச்சை பெற்றுவந்த காயத்திரியின் அறைக்குச் சென்று பெற்றோர் பேசினர். பிறகு காயத்திரியின் அம்மா மட்டும் அழுதுகொண்டே வெளியே வந்தார். அவர் காயத்திரியின் அக்கா ஜோதியிடம், “அப்பா மாதிரி நினைத்த அக்கா கணவர் இப்படி செய்துவிட்டாரே என்று காயத்திரி அழுகிறார். உன்னை நம்பித்தானே அவளை சென்னைக்கு அனுப்பினோம்” என்று ஆத்திரமாகக் கேட்டார்.
அதற்கு காயத்திரியின் அக்கா ஜோதி, “நான் ஊரில் இல்லாதபோது நடந்துவிட்டது. நான் என்ன செய்வது” என்று அழுதார்.
அப்போதுதான் காயத்திரி குடும்பத்தில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
கடந்த மார்ச் மாதம் வரையில் காயத்திரி, அவளது அக்காள் வீட்டில்தான் தங்கியிருந்தாள். பிறகுதான் விடுதியில் சேர்ந்தாள்” என்று சங்கீதா தெரிவித்தார்.
இந்த நிலையில் காயத்திரியின் அக்காள் கணவர் பிரபு கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.