கர்நாடக ஐ ஏ எஸ் அதிகாரி மீது தாக்குதல் : மற்ற அதிகாரிகள் போர்க்கொடி

Must read

பெங்களூரு

ர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதை அடுத்து மற்ற அதிகாரிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.

கடந்த மாதம் 30ஆம் தேதி கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி யஷ்வந்தா மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.  இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் கர்நாடக பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இது மற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.  ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கம் இது குறித்து கர்நாடக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில்,

“தற்போது கொரோனா தாக்குதலால் கர்நாடக மாநிலம் கடுமையாகப் பாதிப்பு அடைந்து வருகிறது.  உங்கள் தலைமையின் கீழ் அரசு நிர்வாகம் இந்த நிலைமையைச் சமாளிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இந்த தொற்று நோய் காலத்தில் அனைத்து ஐ ஏ எஸ் அதிகாரிகளும் தங்கள் முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.  நிலைமையைச் சமாளிக்க தங்கள் சக்தியை மீறி அதிக அளவில் அவர்கள் உழைக்கின்றனர்

இந்நிலையில் எங்கள் சங்க உறுப்பினர்களில் ஒருவரான வி யஷ்வதா என்பவர் மீது பொம்மனஹள்ளியில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி தாக்குதல் நடந்துள்ளது.  இவ்வாறு அவர் தாக்கப்பட்டதற்குக் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்  தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிக படுக்கைகள் பெற அமைக்கப்பட்ட குழுவில் யஷ்வந்தா இடம் பெற்றிருந்தார்.   சட்ட அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து இந்த அதிகாரிகள் குழு படுக்கைகளைப் பெற்றது.  இவ்வாறு பெற்ற படுக்கைகளை மாநில சட்டப்பேரவை உறுப்பினரை சேர்ந்தவர்களுக்கு அளிக்க இந்த அதிகாரிக்கு அழுத்தம் தரப்பட்டது.

இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாததால் இவர் மீது பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அதை வீடியோ படம் ஆக்கப்பட்டுள்ளது.   இது போன்ற சவால்களுக்கு இடையில் கர்நாடக ஐ ஏ எஸ் அடிகாரிகள் களைப்பின்றி கொரொனா நோயாளிகள் நலனுக்காகப் பாடுபட்டு வருகின்றனர்.  பொதுமக்கள் தொற்றால் அவதியுறும் நேரத்தில் இது போன்ற தவறான செய்கைகள் முறையானது இல்லை.

இந்த நேரத்தில் மக்களுக்காகப் பாடுபடும் அதிகாரியிடம் இது போல கடுமையான மற்றும் வன்முறையான நடவடிக்கைகளை நடத்தக் கூடாது.   இந்த தாக்குதலுக்கு எதிராக எங்கள் எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்பதோடு இந்த நிகழ்வு குறித்து உடனடியாக வழக்குப் பதிந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தது குறித்த முதல் தகவல் அறிக்கையை வெளியி8ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்”

என குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article