பாகிஸ்தானில் போர்க் கைதியாக சிறைப்பிடிக்கபப்ட்ட இந்திய விமானி அபிநந்தன் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு மன அமைதிக்காக சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதால் அதன் விமானி வேறு வழியின்றி பாராஷூட் உதவியுடன் பாகிஸ்தானில் இறங்கினார். அவரை பாகிஸ்தான் இளைஞர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விமானி அபிநந்தனை மீட்க இந்தியா துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உலக நாடுகள் பாகிஸ்தானிற்கு அழுத்தம் கொடுத்ததன் பேரில் விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான அறிவித்தார். அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த நிலையில் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து டெல்லி அழைத்து செல்லப்பட்ட அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை விமானி அபிநந்தனை ராணுவ தளபதி தானோவா சந்தித்து பாகிஸ்தானில் நடந்தவை குறித்து கேட்டறிந்தார். அவரை தொடர்ந்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து, ”பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்ட தன்னை உடல் ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்படவில்லை, மனரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டேன் “ என கூறியுள்ளார். இதனால் அபிநந்தனுக்கு மன அமைதிக்காகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னாதாக பாகிஸ்தானில் அபிநந்தன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ”பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. அவர்கள் கண்ணியமாகவும், நல்லவிதமாகவும் என்னை பார்த்துக் கொண்டார்கள்” என அபிநந்தன் கூறியது பதிவாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோ பலமுறை எடிட் செய்யபட்டுள்ளதால் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை மீது இந்தியாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.