சிலுகுரி

ந்திய விமானப்படை தாக்குதல் மிரட்ட நடந்தது எனவும் யாரையும் கொல்வதற்கு நடக்கவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் அலுவாலியா கூறி உள்ளார்.

கடந்த வாரம் அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்க முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாக வெளியுறவுத் துரை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார். அத்துடன் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்களை இந்தியாவில் நடத்த தீர்மானித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து மம்தா பானர்ஜி, “இந்தியா விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு . இறந்தது 300 பேரா அல்லது 350 பேரா? நான் சர்வதேச ஊடகங்களில் வெடிகுண்டுகள் வேறு எங்கோ வீசப்பட்டதாக தெரிவித்ததை படித்தேன். உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? அல்லது யாருமே கொல்லப்படவில்லையா?” என வினா எழுப்பினார்.

டார்ஜிலிங் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ் எஸ் அலுவாலியா மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றதால் வங்க மொழியை பிழையின்றி பேசக் கூடியவர் ஆவார். அலுவாலியா மேற்கு வங்க மாநிலம் சிலுகுரி யில் வங்க மொழியில் உரையாற்றி உள்ளார்

அப்போது அலுவாலியா வங்க மொழியில், “பிரதமர் மோடி எப்போதாவது விமானப்படை தாக்குதலில் 300 பேர் மரணம் அடைந்ததாக தெரிவித்தாரா? அல்லது பாஜக செய்தி தொடர்பாளர் அவ்வாறு கூறினாரா? அல்லது அமித்ஷா எத்தனை பேர் கொல்லப்பட்டார் என ஏதும் குறிப்பிட்டாரா? இந்த விமானப்படை தாக்குதல் மிரட்டுவதற்காக நடந்தவைகள் ஆகும்.

இந்த விமானப்படை தாக்குதல் மூலம் நாங்கள் உங்கள் நாட்டுக்குள் புகுந்து உங்கள் இல்லத்தை தாக்கும் அளவுக்கு வலு பெற்றுள்ளோம். உங்கள் பாதுகாப்பையும் மீறி எங்களால் உங்கள் நாட்டுக்குள் புகுந்து தாகக் முடியும், எந்த இடத்தில் தீவிரவாதிகள் முகாமிட்டாலும் அங்கு எங்களால் தாக்கமுடியும். இந்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவிக்கவே இந்த தாக்குதல் நடந்தது” என குறிப்பிட்டுள்ளார்.