கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், வாக்களிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்ரல் 6) நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கூச் பெஹாரில் அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது, “சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம். பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎஃப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது.

உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎஃப் படையை நான் மதிக்கிறேன். ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃப் அமைப்பை நான் மதிக்கமாட்டேன்” என்றுள்ளார் அவர்.