2017ம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் & கல்சுரல் ட்ரஸ்ட் மற்றும் ஆரோக்கியம் இனிப்பு துளசி சாறு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவினை சிறப்பாக நடத்தின.
இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவருமான விக்ரமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு 2017ம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கி சிறப்பித்தார்கள்.
சிறந்த அறிமுக நடிகராக நந்தன் (பள்ளிப்பருவத்திலே), சிறந்த அறிமுக நடிகையாக அதிதி பாலன் (அருவி), சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி (இப்படை வெல்லும்), சிறந்த இயக்குனராக அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி), சிறந்த கதாசிரியராக கோபி நயினார் (அறம்) சிறந்த அறிமுக இயக்குனராக ஜிப்ஸி ராஜ்குமார் (அய்யனார் வீதி), சிறந்த இசையமைப்பாளராக ஷாம் (விக்ரம் வேதா) இந்தியன் கல்ச்சுரல் அகடமி ஆசிரியர் மற்றும் நிறுவனர் மேரி மேக் மோகன் பால், ,அறிமுக நாயகன் லாபி பால் ஆகியோர் உட்பட பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு, “2017ம் வருடத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியான படங்கள் பெரிய வெற்றிகளை குவித்துள்ளன. டைரக்சனை விட நடிப்புதான் பாதுகாப்பாக தோன்றுகிறது.. காரணம் கஷ்டப்பட்டு டைரக்சன் பண்ணினாலும் மதிப்பு கிடைப்பதில்லை, இனி வரும் நாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தப்போகி றேன். அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏவாக ஆகிவிடவேண்டும்” என்றார் சீரியஸாக.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியபோது, “அடுத்ததாக படங்களை இயக்கவுள்ளேன். எனக்கு டைட்டில் பிரச்சனை எல்லாம் இருக்காது. எஜமான்-2, சிங்காரவேலன்-2 என டைட்டில்களை வைத்து படம் எடுத்து விடுவேன்” என்றார்.