கொல்கத்தா
பிரதமர் மோடிக்கு கூழாங்கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ரசகுல்லாவை அனுப்பி அவர் பல்லை உடைக்க போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசிய பேட்டி வெளியானது. இந்த பேட்டியின் போது மோடி தனது இளமைக்காலம் முதல் நடந்த பல விவரங்களையும் தெரிவித்தார். தாம் இளமைக்காலத்தில் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் குஜராத் முதல்வராகும் வரை தனது உடைகளை தாமே தோய்த்து உடுத்தியதாகவும் மோடி தெரிவித்தார்.
அவருடைய இந்த தகவல் சர்ச்சையை கிளப்பியது. கடந்த 1970 முதல் அவருக்கு உடைகளை துவைத்து தந்த சலவை தொழிலாளிக்கு அவர் பரிசளித்த செய்திகளை நெட்டிசன்கள் வெளியிட்டனர்.
அந்த பேட்டியின் போது அவரிடம் வங்காள தலைவர்களுடன் அவருக்கு உள்ள நட்பு குறித்து மோடி விவரித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் தம் மீது மிகவும் நட்பு கொண்டுள்ளதக தெரிவித்தார். .
அத்துடன் வருடத்துக்கு ஒருமுறை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு சட்டை மற்றும் வங்காள இனிப்புக்கள் அனுப்புவார் எனவும் தெரிவித்தார் அத்துடன் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவும் தமக்கு ஒவ்வொரு வருடமும் இனிப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த தகவலுக்கும் தற்போது ஆட்சேபம் எழுந்துள்ளது.
நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு பதிலளிக்கும் வகையில், “இனிப்புக்களா? நானா? நான் மண் மற்றும் கூழாங்கற்களை கலந்து செய்த ரசகுல்லாவை அனுப்பி அவர் பல்லை உடைக்கப் போகிறேன்” எனக் கூறி உள்ளார்.