திருச்சி:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாவிட்டால், பதவி விலகப்போவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் த எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
திருச்சியில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். அப்போது அவர், “ மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். இது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
தென் மாவட்ட மக்களின் தேவைகளைப் புரியவைப்பதற்காக அமைச்சர் பதவியை விட்டு விலகவும் தயாராக இருக்கிறேன். இது மத்திய அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் கிடையாது. தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அவரிடம், “மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே” என்று கேட்டதற்கு, “அதுபற்றி அவரிடமே கேளுங்கள்” என்றார்.
அதே போல, “மதுரையில் பால் கலப்படம் செய்திருப்பதாக அமைச்சரே தெரிவித்திருக்கிறார். அது உண்மை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்டதற்கு, “இதைப் பற்றி மக்களிடம் நீங்களே சொல்லுங்கள்” என்றார் அமைச்சர் உதயகுமார்.